மினியாபோலிஸ்: அமெரிக்காவின் மினியபோலிஸ் நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு தேவாலயத்தில் மாணவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, வெளியே வந்த நபர் ஒருவர் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 8 மற்றும் 10 வயதுடைய இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
தாக்குதலை நடத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரின் அடையாளம் ராபின் வெஸ்ட்மேன் (20) என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் நினைவாக வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அமெரிக்க தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்குமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, விசாரணையின் போது வெஸ்ட்மேனின் பழைய யூடியூப் வீடியோக்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில், அவர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் “Nuke India”, “Kill Donald Trump” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அதிர்ச்சி பரவியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.