பழமையான திரைப்பட நடிகை மற்றும் ‘அபிநய சரஸ்வதி’ என மக்களால் போற்றப்பட்ட சரோஜா தேவி (87), பெங்களூரில் நேற்று காலமானார். வயது மூப்பால் உடல்நிலை மோசமடைந்த காரணத்தால், நேற்று காலை 8.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சரோஜா தேவி, கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். 16-வது வயதில் கன்னட சினிமாவில் மஹாகவி காளிதாஸ் திரைப்படம் மூலம் ஹொன்னப்ப பாகவதரின் இயக்கத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் கலக்கிய இவர், மொத்தமாக சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
அவரது மறைவுக்குப் பிறகு, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று காலை 11:30 மணி வரை அவரது உடல் பொது மக்களுக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர், அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊரான ராம்நகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுக்காவின் தஷாவரா கிராமம் நோக்கி கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுக அவரது ரசிகர்கள் கண்கலங்க அஞ்சலி செலுத்தினர்.

தஷாவரா கிராமத்தில், ஒக்கலிகர் சமுதாயப் பண்பாட்டு வழிப்பட்ட முறையில், அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது.
சிறப்பு விருதுகள், நடிப்பு சாதனைகள் மட்டுமின்றி, பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டவர் சரோஜா தேவி. தனது கண்களை தானமாக வழங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.