கேன்டீன் ஊழியருக்கு குத்துவிட்ட எம்.எல்.ஏ – “இது சிவசேனா பாணி” என சர்ச்சை விளக்கம்!

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளார். இந்த நிலையில், புல்தானா தொகுதியைச் சேர்ந்த சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு கேன்டீனில் உணவு உண்ட சஞ்சய் கெய்க்வாட், பருப்புச் சாதத்தில் துர்நாற்றம் வீசியதாகக் கூறி அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறிய அவர், கேன்டீனில் நேரில் சென்று அந்த உணவை வழங்கிய ஊழியர் யோகேஷ் குத்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அவர் அந்த ஊழியரை தரையில் தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து NDTV செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சஞ்சய் கெய்க்வாட் கூறியதாவது:

நான் பருப்புச் சாதம், இரண்டு சப்பாத்தி கேட்டேன். சாப்பிட்டதும் வாந்தி வந்தது. உடல்நிலை சரியில்லை. கேன்டீனுக்குப் போய் உணவின் தரம் குறித்து மேலாளரிடம் புகார் தெரிவித்தேன். அங்கு வைத்திருந்த கோழி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பழையவையாக இருந்தன. இது ஆயிரக்கணக்கான பேரின் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது.

அவரிடம், எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஒருவரை தாக்குவது சரியானதா எனக் கேட்டபோது,

நான் காந்தியவாதி இல்லை. நான் ஒரு போர்வீரன். திரும்பத் திரும்ப எச்சரித்த பிறகும் மாற்றம் இல்லாததால், பாலாசாகேப் தாக்கரே கற்றுத்தந்த பாணியில் செயல்பட்டேன். இது தான் சிவசேனா பாணி. நான் ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கராத்தே, மல்யுத்தத்தில் சாம்பியன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்த பிரச்சனையை சட்டமன்றத்தில் உரிய முறையில் எடுத்துச் செல்வேன், எனவும் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர் யோகேஷ் குத்ராவை காவல் துறையினர் விசாரித்ததாகத் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் எந்த புகாரும் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் சிவசேனா (UBT) ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. நானா படேல் இதுகுறித்து கூறியதாவது:

இது அதிகார துஷ்பிரயேகம். ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டத்தை தன் கையில் எடுப்பது சீரழிவுக்குக் காரணம். சஞ்சய் கெய்க்வாட் உணவுக் குழு தலைவராக இருக்க முடியாது. அவரால் உணவின் தரத்தை உறுதி செய்ய முடியவில்லை என்றால், அந்தப் பதவியில் இருந்து உடனடியாக மாற்றப்பட வேண்டும்” என்றார்.

Exit mobile version