சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆம் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை ரூ.276 கோடி மதிப்பில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 16ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2042 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 1953 தற்காலிகப் பணியாளர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனக் கூறி, தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் அருகே 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உழைப்போர் உரிமை இயக்கம் தலைவர் கு.பாரதி தாக்கல் செய்த மனுவில், தொழிலாளர் நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அனுமதியின்றி தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். மனுதாரர் தரப்பில், “2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தெருக்களில் போராடி வருகின்றனர்; அவர்கள் குப்பையைப் போல வீசி எறியப்பட்டுள்ளனர்” என வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விசாரணை நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே நேரத்தில், போராட்டத்தால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக அவசர முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, அரசு தரப்பில் சேப்பாக்கம் மற்றும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
















