அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பாதயாத்திரை வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோயில் நிர்வாகம் ஒரு முன்னோடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. ஆண்டுதோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கிலோமீட்டர் நடைபயணமாகப் பழநிக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பக்தர்கள் சாலையோரங்களில் நடந்து வரும்போது, போதிய வெளிச்சமின்மை காரணமாகப் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த அபாயத்தைத் தடுக்க, ‘ஒளிரும் ஸ்டிக்கர்கள்’ ஒட்டப்பட்ட பாதுகாப்புக் குச்சிகளைப் பக்தர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பழநி கோயில் நிர்வாகம் சார்பில் தற்போது நூற்றுக்கணக்கான மூங்கில் குச்சிகளில் உயர்தர ஒளிரும் பட்டைகள் (Reflective Stickers) ஒட்டும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் இந்தக் குச்சிகளின் மீது படும்போது, அது பிரகாசமாகப் பிரதிபலிக்கும். இதன் மூலம் தொலைவில் இருந்தே பக்தர்கள் நடந்து வருவதை வாகன ஓட்டிகளால் எளிதாக அடையாளம் காண முடியும். இந்தப் பாதுகாப்புப் பட்டை ஒட்டப்பட்ட குச்சிகளை எடுத்து வரும்படி ஏற்கனவே பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கோயில் நிர்வாகமே நேரடியாகத் தயாரித்து வழங்க முன்வந்துள்ளது பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்படும் ஒளிரும் குச்சிகளைத் திண்டுக்கல் மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காகத் தயார் செய்யப்பட்ட குச்சிகளை அந்தந்தப் பகுதி காவல்துறையினரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் விடிய விடியப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது, பாதயாத்திரை பக்தர்களுக்கு இந்தக் குச்சிகளை வழங்குவார்கள். இந்த முயற்சியின் மூலம் இரவு நேரச் சாலை விபத்துகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காகப் பாதயாத்திரை வழித்தடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி மற்றும் கூடுதல் மின்விளக்கு வசதிகளையும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

















