கேரளாவின் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கியத் திருத்தலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சிலை திருட்டு மற்றும் தங்க ஆபரணக் கொள்ளை வழக்கு தொடர்பாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரிடம் கேரள மாநிலப் போலீசார் நடத்திய அதிரடி விசாரணை திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பல்வேறு கோயில்களில் விலைமதிப்பற்ற சிலைகள் மற்றும் நகைகள் மாயமான வழக்குகளை அம்மாநிலச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (SIT) தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கேரளாவைச் சேர்ந்த சில நம்பூதிரிகள் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (எ) எம்.எஸ்.மணி ஆகியோருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கேரள மாநில சிறப்புப் புலனாய்வுப் பிரிவு டி.ஒய்.எஸ்.பி. எஸ்.எஸ்.சுரேஷ் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று திண்டுக்கல் விரைந்தனர். திண்டுக்கல் ரவுண்ட் ரோடு ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியனின் அலுவலகத்தில் போலீசார் திடீர்ச் சோதனை மேற்கொண்டு, பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். கோயில் சொத்துக்களின் பரிமாற்றம் அல்லது நிதி பரிவர்த்தனை தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் போலீஸ் நடவடிக்கையால் திண்டுக்கல் வர்த்தக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
சுமார் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாலசுப்பிரமணியன், “இது ஒரு சாதாரண விசாரணைதான். கேரளா போலீசார் தேடி வந்த ‘D.மணி’ என்ற நபருக்குப் பதிலாக, பெயர்க்குழப்பம் காரணமாகத் தவறுதலாக என்னிடம் விசாரணை நடத்தினர். எனக்கும் இந்தச் சிலை திருட்டு வழக்குக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை,” என விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த வழக்கில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சில முக்கிய நபர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கேரளப் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். சர்வதேச அளவில் சிலைக் கடத்தல் கும்பலுடன் இந்த வழக்கிற்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ரகசியமாகத் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
