கர்நாடகா : கர்நாடகாவின் உத்தரகண்ட மாவட்டம் ராம தீர்த்த மலைப்பகுதியில் உள்ள குகையில், தனது இரண்டு சிறிய குழந்தைகளுடன் ரஷ்யப் பெண் ஒருவர் கடந்த பல ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அடர்வனப் பகுதியாகக் கருதப்படும் இந்த மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக ஆய்வில் ஈடுபட்ட போலீசார், கோகர்ணா அருகே உள்ள ஒரு குகையில் வெளிநாட்டுப் பெண் நடமாடுவதை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அந்தப் பெண் நினா குடினா (40) என்ற ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் அவரது மகள்கள் பிரேமா (6) மற்றும் அமா (4) இருப்பதும் தெரியவந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் குறித்த குகையிலேயே குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் எனத் தெரியவந்துள்ளது.
வணிக விசாவில் இந்தியாவுக்குத் திரும்பிய நினா குடினாவின் விசா 2017ஆம் ஆண்டு முடிந்துவிட்டதாகவும், அதன் பின்னர் அவர் கோவா, நேபாளம் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் செய்த பிறகு, மீண்டும் கர்நாடகா குகைக்குத் திரும்பி வசித்து வந்தார் எனக் கூறப்படுகிறது.
அங்கு அவர், சுயமாக விறகு வெந்து சமைத்து உணவு தயாரித்து, மளிகைச் சாமான்கள், காய்கறிகளை வாங்கி வந்துள்ளார். தியானம் மற்றும் யோகாவில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நினா, “பாம்புகள், விஷ ஜந்துக்கள் எங்கள் நண்பர்கள். நாம் அவற்றைத் தொந்தரவு செய்யவில்லை என்றால், அவை எங்களைத் தாக்காது” என போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல்.
மேலும், நினாவுக்கு ரஷ்யாவில் இன்னொரு குழந்தை இருப்பதும், அவரது கணவர் இஸ்ரேலிய தொழிலதிபர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவருக்கு மனநல ஆலோசனை (கவுன்சிலிங்) அளிக்கப்பட்டு, பின்னர் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ரஷ்யாவுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.