பாகிஸ்தானின் தற்போதைய ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் அதிபராக நியமிக்கப்படுவார் என வெளியாகிய செய்திகளுக்கு, பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ மறுப்பு தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆகியவை சேர்ந்து கூட்டணி அரசு அமைத்தன. அதன்படி, ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகவும், ஆசிஃப் அலி சர்தாரி அதிபராகவும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், அதிபர் சர்தாரி பதவி விலகும் வாய்ப்பு இருப்பதாகவும், அவரது பதவிக்கு ராணுவத் தளபதி அசிம் முனீர் நியமிக்கப்படுவார் எனவும் பல ஊடகங்களில் தகவல்கள் பரவின. மேலும், பாகிஸ்தான் அரசாங்கம், ராணுவ ஆலோசனையின் கீழ் இயங்குவதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி விளக்கமளித்துள்ளார். “இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தி மட்டுமே. அதிபர் பதவி விலகுவது தொடர்பாக எந்தவொரு விவாதமும் நடத்தப்படவில்லை. பிரதமர் மற்றும் அதிபர் சர்தாரி ஆகியோர் மீது தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற பிரசாரங்களை யார் செயல்படுத்துகின்றனர் என்பது எங்களுக்குத் தெரியும். அதிபரும் ராணுவத்துடன் மரியாதைக்குரிய உறவை பேணிக்கொண்டு வருகிறார். வெளிநாட்டு அமைப்புகளுடன் கைகோர்த்து, அவ்விதமான வதந்திகளை பரப்பும் முயற்சிகள் எங்களை பாதிக்காது. பாகிஸ்தானை வலிமைப்படுத்த என்ன தேவைப்படுகிறதோ அதையே செய்வோம்,” என்று அவர் கூறினார்.