மத்திய அரசின் பணியாளர் தேர்வுகளில் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தங்கள் சொந்த உதவியாளர்களை பயன்படுத்தும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் படி, UPSC, SSC உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகள் நடைபெறும் போது, குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற உதவியாளர்களைக் கொண்ட குழுக்களை தேர்வு வாரியங்கள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உதவியாளர்களின் கல்வித் தகுதி, தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதியை விட 2 அல்லது 3 கல்வியாண்டுகள் குறைவாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய குழுக்கள் உருவாக்கப்படும் வரை, விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தங்கள் சொந்த உதவியாளர்களை அழைத்துவர அனுமதி வழங்கப்படும். அதோடு, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் அவர்களே சுயமாக தேர்வுகளை எழுதும் நடைமுறையையும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.