டில்லியில் ரூ.5,590 கோடி மதிப்பிலான மருத்துவமனை கட்டும் திட்டத்தில் பெரும் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அமலாக்கத்துறை இன்று 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தியது.
2018-19ம் ஆண்டில் டில்லி அரசு, 24 புதிய மருத்துவமனைகள் கட்டும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. ஆறு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மூன்று ஆண்டுகள் கடந்தும் மருத்துவமனைகள் நிறைவு பெறாததால், திட்டத்தில் ரூ.5,000 கோடி வரை மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், அந்நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஆம்ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜின் இல்லத்திலும், முன்னாள் அமைச்சர் சந்தேயந்தர் ஜெயினுடன் தொடர்புடைய இடங்களிலும் இன்று சோதனை நடத்தப்பட்டது.
டில்லி முழுவதும் 12 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
