குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளை உறுதிப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு கள ஆய்வைத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் பெருமளவில் பெறப்பட்டன. ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் இந்தத் திட்டம், மகளிர் நலனுக்காக தமிழக அரசின் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், தகுதி இருந்தும் பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக வந்த குறைகளை தீர்க்கும் வகையில், புதிய கள ஆய்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, நியமிக்கப்பட்ட கள பணியாளர்கள் ஒரு நாளுக்கு குறைந்தது 100 விண்ணப்பங்கள் வரை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள ஆய்வின் போது, விண்ணப்பதாரர்களின் வீட்டு நிலை, வாடகை அல்லது சொந்த வீடு, வங்கி கணக்கு விவரங்கள், மொபைல் எண், பொருளாதார நிலை போன்ற தகவல்கள் சரிபார்க்கப்படுகின்றன. இத்தகவல்கள் அனைத்தும் உண்மையா என்பதை உறுதிசெய்யும் பணிகள் வட்டாட்சியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன.
ஆய்வுக்குழுவினர் ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்த விண்ணப்பங்களை செயலியில் பதிவேற்றம் செய்து, மாலை 6 மணிக்குள் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கள ஆய்வு முடிந்ததும், தகுதி நிரூபிக்கப்பட்ட மகளிர்க்கு ஜனவரி மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி, திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, உண்மையில் உதவி தேவைப்படும் குடும்பத் தலைவிகளுக்கே நன்மை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.