வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய போது, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தன்னை மிரட்டியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளர். அவரது இந்தப் பரபரப்பான குற்றச்சாட்டுக்கு, அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி கடுமையான மறுப்பை தெரிவித்துள்ளார்.
இந்தியா தேசிய காங்கிரஸின் வருடாந்திர சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது, ராகுல் காந்தி கூறியதாவது :
“நான் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய போது, ‘அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் நீங்கள் போராடினால், உங்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என அருண் ஜெட்லி மிரட்டினார். அவரிடம் நான் ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதையே புரிந்து கொள்ளவில்லை’ என பதிலளித்தேன்.”
இத்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்த, ரோஹன் ஜெட்லி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்து, “என் தந்தை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இயற்கை எய்தினார். வேளாண் சட்டங்கள் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. எனவே, தந்தை அந்த சட்டங்களை முன்னிட்டு மிரட்டியிருக்க முடியாது,” எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், “மாற்றுக்கருத்து கொண்டவர்களை மிரட்டும் குணம் என் தந்தைக்கு கிடையாது. அவர் ஒரு தீவிர ஜனநாயகவாதி; எப்போதும் வெளிப்படையான, சுதந்திரமான விவாதத்திற்கு அழைப்புவிடுவார்,” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் மற்றும் எம்பி அனுராக் தாக்கூர்,
“காங்கிரஸ் மற்றும் பொய் – இதை பிரிக்க முடியாது. ராகுல் காந்தி அருண் ஜெட்லி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,”
எனக் கடுமையாக விமர்சித்தார்
