சென்னை :
திருப்பூரைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த ரிதன்யா, வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல் விஷம் அருந்தி உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், விசாரணையை சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழுவுக்கு மாற்றக் கோரி, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மனுத்தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைந்து விசாரணை அதிகாரி வழக்கை முறையாக நடத்தவில்லை என்றும், கவினின் செல்போன் பரிசோதனை கூட செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், அரசியல் தொடர்பும் உள்ளதால் காவல்துறை விசாரணை நம்பகமற்றதாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதை பதிவு செய்தார். காவல்துறை தரப்பு சார்பில், கவினின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டதில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிபிஐ அல்லது வேறு அமைப்புக்கு வழக்கை மாற்ற தேவையில்லை என தெரிவித்தது. மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும், விசாரணை மேற்பார்வையை திருப்பூர் மாவட்ட எஸ்.பி மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.