ரிதன்யா தற்கொலை வழக்கு : கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய மூவர் கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி இருவரும் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு எதிராக, ரிதன்யாவின் பெற்றோர், “இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. மேலும் மாமியாரும் கைது செய்யப்பட வேண்டும்” என இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

பின்னர், சித்ராதேவி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் சார்பாக தனி ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கவனித்த நீதிபதி குணசேகரன், “கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி இருவருக்கும் ஜாமீன் வழங்க இயலாது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை தொடரும் நிலையில், சித்ராதேவியின் ஜாமீன் மனு தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version