வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இரண்டாம் போக நெல் விவசாயத்திற்கான பாவும் பணி துவங்கியுள்ள நிலையில், வயல்களில் வளர்ப்பு பன்றிகள் புகுந்து நெல்மணிகளை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கடும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை பாசன நீரின் துணையுடன் உப்பார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல்போக நெல் அறுவடை பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இரண்டாம் போக நெல்சாகுபடிக்கான பாவும் வேலைகள் விவசாயிகள் மத்தியில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சிலர் வளர்த்து வரும் வளர்ப்பு பன்றிகள் வயல்வெளிகளில் புகுந்து புதிதாக பாவப்பட்ட நெல்மணிகளை தின்று சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஏற்கனவே பாவப்பட்ட நிலங்களில் மீண்டும் நெல்மணிகளைப் பாவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி பேசுகையில், “எங்களுடைய நெல்பாவும் வயல்களில் சிலர் வளர்ப்பு பன்றிகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.

இவை வயலுக்குள் புகுந்து பாவப்பட்ட நெல்மணிகளை தின்று நாசம் செய்கின்றன. இதனால் எங்களுக்கு இரட்டிப்பு இழப்பு ஏற்படுகிறது. வயலுக்குள் பன்றிகள் இறங்காதவாறு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். விவசாயிகளின் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண, வளர்ப்பு பன்றிகளின் கட்டுப்பாட்டிற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version