காஷ்மீர் மக்களின் உரிமையை மீட்டுத்தாருங்கள் – பிரதமருக்கு ராகுல் கடிதம்

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை, வரவிருக்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு, இந்திய அரசின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. அதன்பின் மத்திய அரசு, “நிலைமை வழக்கத்திற்கு வரும் பிறகு, மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்” என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ராகுல் காந்தி கூறியிருப்பதாவது :

“ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என நீங்கள் பல முறை வாக்குறுதி அளித்துள்ளீர்கள். கடந்த 2024 மே 19-ம் தேதி புவனேஸ்வரில், ‘மாநில அந்தஸ்து மீள வழங்கப்படும்’ என கூறியுள்ளீர்கள். இதேபோன்று, 2024 செப்டம்பர் 19-ம் தேதி ஸ்ரீநகரில், பார்லிமென்டிலும் அதைப்பற்றி உரையாற்றியதாக தெரிவித்தீர்கள்.

ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட முதல்முறையான இந்த முடிவை, மக்கள் ஏற்க மறுக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது அவர்களது அரசியல்சாசன உரிமை மட்டுமல்ல, ஜனநாயக உரிமையும் கூட.”

இவ்வாறு அவர் வலியுறுத்தி, தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியுள்ளார்.

Exit mobile version