கோவை :
தமிழகத்தில் டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :
“சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெறப்போகிறார் என்பதை முன்னரே அறிந்தும், புதிய டி.ஜி.பி.யை நியமிக்காமல், முதல்வர் வெளிநாடு சென்றுவிட்டார். எட்டு மூத்த அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் என்பது சட்டத்திற்கு புறம்பானது. உடனடியாக புதிய டி.ஜி.பி. நியமிக்கப்பட வேண்டும்.
தி.மு.க. அரசு வந்த பிறகு, சுமார் 7 சதவீத மாணவர்கள் அரசு பள்ளியிலிருந்து தனியார் பள்ளிக்கு மாறியுள்ளனர். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஒரு மோசடி. காவல்துறையிலும் அரசியலை கலப்பது தி.மு.க. தான். துணை முதல்வர் உதயநிதியிடம் கேள்வி கேட்டால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.
முதல்வர் வெளிநாடு சென்று போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது மக்களை ஏமாற்றுவதாகும். அவர் ஜெர்மனி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பை யாரும் ஏற்க மாட்டார்கள்.
இந்தியா-சீனா சண்டை போடக்கூடாது என்பதை சீன அதிபர் உணர்ந்துள்ளார். வரும் நூற்றாண்டு ஆசிய கண்டத்தின் நூற்றாண்டாக அமையும். இந்தியா, சீனா முன்னேறும் நிலையில், நம்மை யாராவது கைக்கூலியாக மாற்ற முயன்றால், அது அவர்களுக்கு பாடமாக மாறும். மேலும், இன்னும் சில வாரங்களில் இந்திய ஏற்றுமதியாளர்களின் நெருக்கடி நீங்கும்,” என்று அவர் தெரிவித்தார்.