விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த புல்வாய்பட்டி கிராமத்தில் சாலை, வடிகால் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த மூன்று தசாப்தங்களாக மேம்படுத்தப்படாமல் உள்ளதால், கிராம மக்கள் மிகுந்த சுகாதாரச் சீர்கேட்டிற்கு மத்தியில் வாழ வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் உள்ள நடுத்தெரு, வடக்கு தெரு, மேலத் தெரு மற்றும் கிழக்கு தெருக்களில் சாலைகள் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தற்போது தார் சாலைகள் இருந்த இடமே தெரியாத அளவிற்கு மண் சாலையாக மாறிவிட்டன. பெயர்ந்து கிடக்கும் கற்கள் பாதசாரிகளின் கால்களைப் பதம் பார்ப்பதுடன், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
வடிகால் வசதி குறித்துப் புகார் தெரிவிக்கும் புல்வாய்ப்பட்டி குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்களான ருக்மணி, சுப்புலட்சுமி, ராமலட்சுமி, மாரியம்மாள், குருசாமி, மகேந்திரன், மாடசாமி மற்றும் சிவகணேசன் ஆகியோர் கூறுகையில், “எங்கள் தெருக்களில் இருந்த வாறுகால்கள் முற்றிலும் தூர்ந்து போய்விட்டன. கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலைகளிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி மர்மக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துப்புரவுப் பணியாளர்கள் மாதம் ஒருமுறை மட்டுமே வருகின்றனர். அவர்கள் சாலைகளை மட்டுமே பெருக்கிவிட்டுச் செல்கின்றனரே தவிர, கழிவுநீர் வாய்க்கால்களைச் சுத்தம் செய்வதில்லை. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்புள்ள குப்பைகளைத் தாங்களே அகற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என வேதனையுடன் தெரிவித்தனர்.
சுய உதவிக் குழு கட்டடம் புதர் மண்டி கிடப்பதும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முறையான சுகாதார வளாகங்கள் இல்லாததும் இப்பகுதி மக்களின் மற்றொரு பெரும் குறையாக உள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் மக்கள் இன்றும் திறந்தவெளியையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், சுடுகாட்டிற்குச் செல்லும் சாலை கரடுமுரடாக இருப்பதால், மழைக்காலங்களில் சடலங்களைச் சுமந்து செல்ல முடியாமல் உறவினர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், ‘நிதி இல்லை’ என்றே பதில் வருவதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடிநீர் வசதியைப் பொறுத்தவரை, உப்புத் தண்ணீர் குழாய்கள் பழுதான நிலையில் உள்ளன. அமைக்கப்பட்டிருந்த மினி பவர் பம்ப் மற்றும் தண்ணீர் தொட்டி சேதமடைந்து பல மாதங்களாகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. தற்போது மேலத்தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் கட்டப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலை புதர் மண்டி கிடப்பதுடன், வடக்கு குறுக்குத் தெருக்களில் எவ்வித வசதிகளும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூடுதல் நிதி ஒதுக்கி, புல்வாய்பட்டி கிராமத்தின் சாலை, குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளைத் தீர்க்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

















