வங்கிகளுக்கு குறுகிய காலக் கடனாக வழங்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்துள்ளது. இதன் பலனாக வீட்டு மற்றும் வாகனக் கடன்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உருவாகி உள்ளது.
டிசம்பர் மாத நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 3, 4 மற்றும் இன்று நடைபெற்றது. இறுதி நாளான இன்று, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ரெப்போ விகிதத்தை குறைக்கும் முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ரெப்போ விகிதம் இதுவரை இருந்த 5.50% இலிருந்து 5.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய விகிதம் உடனடியாக அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
2025–2026 நிதியாண்டில் இதுவரை மொத்தம் 125 பேசிக் பாய்ண்ட் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டில் ரெப்போ விகிதம் குறைப்பு செய்யப்படும் இது நான்காவது தடவையாகும். ரெப்போ விகிதம் குறைப்பின் தாக்கமாக வங்கிகள் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதமும் கீழிறங்கும். இதன் மூலம் வீடு மற்றும் வாகனக் கடன்களின் EMI குறைவதே நிச்சயம் என நிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரெப்போ விகிதம் உயர்ந்தால் வங்கிகளின் கடன் செலவுகள் அதிகரிக்கும்; அதன் தாக்கமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்களின் வட்டியும் உயரும். அதேபோல், ரெப்போ விகிதம் குறைந்தால் கடன் வட்டி சுமை குறையும். உடனடி வட்டி சரிசெய்தல் வசதி கொண்ட கடனாளர்களுக்கு இதன் பயன் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது.
