AI தொழில்நுட்பத்திற்காக மெட்டாவுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ்

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தி, புதுமையான தீர்வுகளை வழங்கும் நோக்கில், ரிலையன்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி மெட்டா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு இறுதி பொதுக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மெட்டா இணைந்து ஒரு புதிய கூட்டு நிறுவனம் உருவாக்கவுள்ளன. ஆரம்ப முதலீடாக சுமார் ₹855 கோடி (தோராயமாக $100 மில்லியன்) செலவிடப்படவுள்ளது. இதில் ரிலையன்ஸ் 70% பங்கையும், மெட்டா 30% பங்கையும் முதலீடு செய்யவுள்ளது.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், மெட்டாவின் ‘லாமா’ AI மாதிரிகளை பயன்படுத்தி, இந்திய வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்காக மலிவான விலையில் AI தளங்கள் மற்றும் கருவிகளை உருவாக்குவதாகும்.

மெட்டா, தனது மேம்பட்ட ஓப்பன் சோர்ஸ் AI மாதிரிகள் மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களை வழங்கும். அதேசமயம், ரிலையன்ஸ் தனது வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு, சேவை வழங்கும் திறன் மற்றும் இந்திய முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்களுடனான அணுகலை கொண்டு வரும்.

இந்த கூட்டாண்மையைப் பற்றி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்ததாவது :
“இந்த கூட்டணி, ஒவ்வொரு இந்தியரும், ஒவ்வொரு நிறுவனமும் AI-ஐ அணுகும் வாய்ப்பை உருவாக்கும். சிறிய நிறுவனங்களிலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை அனைவருக்கும் உலகத் தரத்தில் போட்டியிட உதவும் வகையில் AI தொழில்நுட்பத்தை வழங்குவோம்,” என்றார்.

மெட்டா நிறுவனம் சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க் கூறுகையில்:
“ரிலையன்சுடன் எங்களின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய நிறுவனங்களுக்கு ஓப்பன் சோர்ஸ் AI-இன் ஆற்றலை கொண்டு செல்லும் முக்கிய வாய்ப்பாக இதைப் பார்க்கிறோம்,” என தெரிவித்தார்.

இந்த கூட்டணி, இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் பரவலையும், வணிகத் துறையின் டிஜிட்டல் முன்னேற்றத்தையும் புதிய நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version