மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு : மத்திய அரசை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் ஒப்புதல் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, கோவை மற்றும் மதுரை நகரங்களிலும் மெட்ரோ ரயில் வசதி அமைக்க தமிழக அரசு தீர்மானித்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதற்கான விரிவான திட்ட அறிக்கைகளையும் துணை அறிக்கைகளையும் தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்தது.

இதில், கோவை மெட்ரோ: 34.8 கிமீ நீளம், 32 நிலையங்கள், செலவு – ரூ.10,740 கோடி

மதுரை மெட்ரோ: திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 32 கிமீ, 27 நிலையங்கள், செலவு – ரூ.11,340 கோடி

இந்த அறிக்கைகள் கடந்த டிசம்பரில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டன. பரிசீலனை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இப்போது இரு நகரங்களுக்குமான மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தெரிவித்த விளக்கத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோவைக்கு 15.84 லட்சமும் மதுரைக்கு 15 லட்சமும் மட்டுமே மக்கள் தொகை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2017 மெட்ரோ கொள்கைக்கின்படி, 20 லட்சம் மக்கள் தொகையை கடந்த நகரங்களிலேயே மெட்ரோ ரயில் கொண்டு வர முடியும் என்பதால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மெட்ரோ திட்டங்களுக்கு மிக உயர்ந்த செலவு தேவைப்படுவதால், நீண்ட காலத்திற்கான திட்டமிடல் முக்கியம் எனவும், இதற்குப் பதிலாக BRTS (Bus Rapid Transit System) போன்ற திட்டங்கள் பொருத்தமானவை என்றும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் சென்னையில் இந்த BRTS முறையே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவை கடுமையாக கண்டித்த முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் கணக்கில், “மதுரை, கோவை போன்ற வளர்ந்து வரும் நகரங்களுக்கு மெட்ரோ திட்டத்தை ‘NO’ என நிராகரித்தது ஒன்றிய அரசின் பாகுபாட்டு அணுகுமுறையை காட்டுகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் சிறிய நகரங்களுக்கு கூட அனுமதி வழங்கி, எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாட்டை புறக்கணிப்பது ஏற்கத்தக்கது அல்ல. கூட்டாட்சி மனப்பான்மையை சீர்குலைக்கும் இந்த செயலுக்கு தமிழ்நாடு ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது” என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை மெட்ரோ திட்டத்தில் ஏற்பட்ட தடைகளையும் தாண்டி முன்னேறியதை குறிப்பிட்ட அவர், “அதேபோல், கோவை மற்றும் மதுரைக்கும் வளர்ச்சிக்கான மெட்ரோ ரயிலை அவசியம் கொண்டு வருவோம்” என உறுதிமொழி வழங்கினார்.

மெட்ரோ வருவதாக நம்பியிருந்த கோவை, மதுரை மக்களுக்கு இந்த நிராகரிப்பு ஏமாற்றம் அளித்துள்ளது.

Exit mobile version