பெரம்பலூர்: நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மறுத்த சம்பவம் குறித்து, “அது சபை நாகரிகம் அல்ல” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணவியின் கொள்கை பிடிப்பும், துணிச்சலும் பாராட்டத்தக்கவை. இருப்பினும், சபை நாகரிகம் என்பதும் முக்கியம். ஒரு வகையில் அவரது செயல் ஏற்புடையதாக இருந்தாலும், அது தனிப்பட்ட அணுகுமுறையாகும். பொதுவெளியில் நடந்துகொள்ளும் போது நாகரிக மரபுகளையும் மதிக்க வேண்டும்,” என்றார்.
அவர் தொடர்ந்தும், “பார்லிமென்ட் குழுவில் இருந்தபோது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை கேலி செய்திருந்தாலும், அனைவரைப் போல கைகுலுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கோபமும், வருத்தமும் இருந்தபோதும், சபை நாகரிகம் கருதி அந்த முறையைப் பின்பற்றினேன். அதே உணர்வோடு இச்சம்பவத்தையும் பார்க்கிறேன்,” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழ் மற்றும் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் கவர்னர் பேசிவருகிறார். அதனால், அவரது தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்,” எனவும் கூறினார்.
அதுடன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைப் பற்றி பேசும்போது, “தூய்மை பணியாளர்களை வீட்டிற்கு அழைத்து பேசுவது சரியான நடைமுறை அல்ல. தலைவர்கள் தான் மக்களை தேடிச் செல்ல வேண்டும். இதை விஜய் கற்றுக்கொள்ளவில்லை; காலம் அதை அவருக்கு கற்றுத் தரும்,” என்றார்.