வடஇந்திய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்க்கும் மழையால் ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு, மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் ராணுவத்தினர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கே வெளியில் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மழை நிலவரம் மோசமடைந்ததால், ஜம்முவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராஜஸ்தான், தென்மேற்கு உத்தரப்பிரதேசம், வடமேற்கு மற்றும் கிழக்கு மத்தியப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலும் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இப்பகுதிகளில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.