இந்திய விவசாயிகளின் நலனில் எந்தவித சமரசமும் இல்லை என்றும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
பசுமைப் புரட்சி முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவையொட்டி, டில்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது :
“இந்திய விவசாயிகளின் நலனே எனக்கு முதன்மை. அவர்களை பாதுகாக்க வேண்டிய விலை எதுவாக இருந்தாலும் கொடுக்க தயார். விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தில் எந்தவித சமரசமும் இந்திய அரசு செய்யாது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது.”
இந்தக் கருத்துகள், இந்திய தயாரிப்புகள் மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைக்கு பிரதமர் மோடி கொடுத்த பதிலடி எனக் கூறப்படுகிறது.
மேலும், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி,
“உணவுத் தானியங்களில் தன்னிறைவை நோக்கி இந்தியா செல்லும் பாதையை அவர் உருவாக்கினார். பசுமைப் புரட்சியின் வாசல் கதவைத் திறந்தவர் அவர். அவருக்கு பாரத ரத்னா வழங்கும் அதிர்ஷ்டம் நம் அரசுக்கு கிடைத்தது என்பதை எனது நற்குணமாக கருதுகிறேன்” என தெரிவித்தார்.