திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. “கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை தன் கடமையிலிருந்து தவறிவிட்டது” என்று மனுதாரர் தரப்பு குற்றம் சாட்டியுள்ளதோடு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு காணத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ஒரு கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம ரவிகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை நிறைவேற்றாததால் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இதனை எதிர்த்துத் தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் கடந்த நான்கு நாட்களாக விசாரணைக்கு வந்தது.
இன்று நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் ராம ரவிகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம் மற்றும் வள்ளியப்பன் ஆகியோர் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். “கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாப்பது அறநிலையத்துறையின் அடிப்படை கடமை. ஆனால், இந்த விவகாரத்தில் அவர்கள் முற்றிலும் தவறிவிட்டனர். 1920-ம் ஆண்டின் சிவில் வழக்கு உத்தரவுப்படி, அந்த இடத்தில் தீபத்தூண் அமைந்துள்ளதற்கும், அங்குத் தீபம் ஏற்றியதற்கும் ஆவணங்கள் உள்ளன. ஆனால் அரசுத் தரப்பு, அது சமணர்கள் காலத் தூண் என்றும், நில அளவைக் கல் என்றும் மாற்றி மாற்றிப் பேசி நிலைமையைச் சிக்கலாக்குகிறது” என்று வாதிட்டனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வள்ளியப்பன் பேசுகையில், “அந்தத் தூணில் தீபம் ஏற்றினால் மட்டுமே சுற்றியுள்ள மக்களுக்கு அது தெளிவாகத் தெரியும். இந்த விவகாரத்தை அரசு வேண்டுமென்றே சிக்கலாக்கி வருகிறது. இருப்பினும், இந்த நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு ஒரு சுமுகமான சமரச தீர்வை முன்வைத்தால், அதனை ஏற்க மனுதாரர் ராம ரவிகுமார் தரப்பு தயாராக உள்ளது. மேலும், கோவில் மற்றும் தர்காவிற்குச் சொந்தமான நில எல்லைகளைத் துல்லியமாக நிர்ணயிக்க மலையை அளவீடு செய்ய ஒரு கமிஷனரை நியமிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
அரசு தரப்பில், “மலை உச்சியில் கடந்த 73 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவிலில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மனுதாரர் குறிப்பிடும் தூண் ஒரு சர்வே கல் மட்டுமே; அதில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை” எனத் தொடர்ந்து வாதிடப்பட்டு வருகிறது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு (டிசம்பர் 19) ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் தெரிவித்த கருத்தால் ஏற்கனவே பரபரப்பில் உள்ள இந்த வழக்கு, தற்போது சமரசப் பேச்சுவார்த்தை மற்றும் எல்லை அளவீடு என்ற புதிய திசையை நோக்கி நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















