ரசிகர்கள் உயிரிழப்பு : உருக்கமான அறிக்கையுடன் நிதியுதவியை உயர்த்திய RCB

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம் இன்னும் ரசிகர்கள் மனதில் மங்காத நிலையில், அணி நிர்வாகம் 84 நாட்களுக்குப் பிறகு மவுனம் கலைத்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும், புதிய ‘RCB Cares’ திட்டத்தை தொடங்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட துயரம்

18வது ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியை வீழ்த்தி RCB முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, கடந்த ஜூன் 4 அன்று சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நீதிமன்ற, அரசின் நடவடிக்கைகள்

சம்பவத்துக்குப் பிறகு, கர்நாடக அரசு ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் நீதி விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதேபோல், கர்நாடக உயர்நீதிமன்றமும் தானாகவே வழக்குப் பதிவு செய்து, நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த அறிக்கையில், போலீசாரை கலந்தாலோசிக்காமல் பொதுமக்களை அழைத்தது RCB நிர்வாகம் தான் என குற்றஞ்சாட்டப்பட்டது.

RCBயின் உருக்கமான அறிக்கை

இந்நிலையில், RCB நிர்வாகம் நீண்ட மவுனத்துக்குப் பிறகு ஆகஸ்ட் 28 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், “ஜூன் 4ஆம் தேதியிலான நிகழ்வு எங்கள் இதயங்களை உடைத்துவிட்டது. நீண்ட அமைதி பல விஷயங்களை கற்றுத்தந்தது. ரசிகர்களுக்கு துணை நிற்பதே எங்கள் நோக்கம்” என குறிப்பிடப்பட்டது.

மேலும், ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி தொகை உயர்த்தப்பட்டு, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. “அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை எதுவும் நிரப்ப முடியாது. ஆனால் முதல் படியாகவும் மிகுந்த மரியாதையுடனும் இந்த நிதியுதவியை வழங்குகிறோம்” என RCB தெரிவித்துள்ளது.

புதிய ‘RCB Cares’ திட்டம்

அத்துடன், ‘RCB Cares’ என்ற புதிய சமூகப் பொறுப்பு திட்டத்தின் தொடக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் பல நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக RCB வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version