இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (ஆகஸ்ட் 6) monetary policy அறிவிப்பை வெளியிட்டார். அதில், ரெப்போ விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து 5.50% ஆகவே வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதாகவும், பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது உரையில் நாட்டு மக்களுக்கு பொருளாதார ரீதியாக முக்கியமான பஞ்ச் அம்சங்களை அவர் வலியுறுத்தினார்:
ரெப்போ விகிதம் மற்றும் கொள்கை நிலைப்பாடு
மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) ஒருமனதாக ரெப்போ விகிதத்தை 5.50 சதவீதமாகவும், கொள்கை நிலைப்பாட்டை ‘நடுநிலை’ (neutral) என வைப்பதாக முடிவெடுத்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மற்றும் நிதி சந்தைகளில் ஒருவித நிலைத்தன்மையை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP)
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. சர்வதேச வர்த்தக சவால்கள் இருந்தாலும், உள்நாட்டு வளர்ச்சி தேவைகள் இந்த வளர்ச்சியை முன்னேற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பணவீக்கம் (Inflation)
2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில், நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் (CPI) 2.1% ஆக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த 77 மாதங்களில் இல்லாத அளவுக்கான குறைந்த அளவாகும்.
2026 நிதியாண்டிற்கான காலாண்டு அடிப்படையிலான பணவீக்க கணிப்புகள்:
Q1: 3.1% (முந்தையது 3.7%)
Q2: 2.1% (முந்தையது 3.4%)
Q3: 3.1% (முந்தையது 3.9%)
Q4: 4.4% (மாறாமலே தொடரும்)
பணப்புழக்கம் மற்றும் நிதிச் சந்தை நிலை
பணப்புழக்க சரிசெய்தல் வசதி (LAF) நிலைமைகள் உயரும் நிலை காணப்படுகிறது. கடந்த கொள்கையில் அறிவிக்கப்பட்ட CRR குறைப்பு, 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும்.
2025ம் ஆண்டு ஜூன் இறுதியில் வங்கி கடன்-வைப்பு விகிதம் 78.9% ஆக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்த நிலையைப் போன்றது. 2024-25 ஆண்டில் வங்கிக் கடன் வளர்ச்சி 12.1%, இது கடந்த ஆண்டின் 16.3% வளர்ச்சியைவிட குறைவாக இருந்தாலும், பத்தாண்டு சராசரி 10.3% விட அதிகமாகும்.
ஜன்தன் கணக்குகளுக்கான புதிய நடவடிக்கை
ஜன்தன் திட்டம் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், பல கணக்குகளுக்கு மறு KYC செயல்முறை தேவைப்படுவதாக RBI தெரிவித்துள்ளது. இதனை எளிதாக்க, ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை, பஞ்சாயத்து மட்டத்தில் வங்கிகள் முகாம்கள் நடத்தி வருகின்றன. இது கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அறிவிப்புகள், வட்டி விகிதங்களில் மாற்றமின்றி பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ள நிலை மற்றும் நிலையான வளர்ச்சி கணிப்புகள் மூலம், இந்தியாவின் மொத்த பொருளாதாரத்திற்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.