திண்டுக்கல்: தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரிய தகுதியான நபர்களுக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 1.16 கோடியை எட்டியுள்ளதாகவும் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டை, ரெட்டியப்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் அமைச்சர் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதன்பின் பேசிய அவர்,
“முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், இந்தியாவில் எங்கும் இல்லாத ஒரு புதிய முயற்சியாகும். மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலுவலர்களைச் சந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல், அரசு அதிகாரிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் திட்டம் இது,” என்று தெரிவித்தார்.
இந்த முகாமில் வருவாய், ஊரக வளர்ச்சி, மின்சாரம், வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர். மொத்தம் 46 சேவைகள் மூலம் பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பெண்களுக்கான திட்டங்களைப் பற்றி பேசும் போது,
“நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் விடியல் பயணத் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.900 வரை சேமிப்பு கிடைக்கிறது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் 2023 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது. இதன் கீழ் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுவரை 1.16 கோடி பெண்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். தகுதியானவர்களுக்கு ஒரு மாதத்தில் தொகை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார் அமைச்சர் சக்கரபாணி.
அவர் மேலும் கூறியதாவது:
“கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. 8 இலட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் இதுவரை 2 இலட்சம் வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு வீடு ரூ.3.5 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.”
குடும்ப அட்டை விஷயத்திலும் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியானவர்களுக்கு 15 நாளில் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதுவரை மாநிலம் முழுவதும் 21 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 52 மாதங்களில் 3,000 புதிய நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன,” என்றார் அமைச்சர் சக்கரபாணி.
















