மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த்ராவ் சிக்கித்சாலயா அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் மீது எலி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு, கை விரல், தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் எலி கடித்ததால் காயம் ஏற்பட்டுள்ளது.
செவிலியர் ஒருவர் குழந்தைகளின் உடலில் காயங்களை கவனித்து, உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தைகள் படுத்திருந்த தொட்டில்களுக்கு அருகே மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது எலிகள் ஓடிய காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு குழந்தையின் கை விரலை எலி கடித்துள்ளது. அதேபோல் திங்கட்கிழமை மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டையை எலி கடித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை புறக்கணித்ததாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், சம்பவக் காட்சிகள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.