சென்னை குரோம்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் 22 வயது மாணவரும், ரேப்பிடோ பைக் ஓட்டுநரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் படித்து வந்த பாலமுருகன் (22) ரேப்பிடோ பைக் சேவையை பயன்படுத்தி தனது நண்பர் வீட்டிற்குச் செல்வதற்காக புறப்பட்டார். அவர் சென்ற பைக் சானடோரியம் ஜி.எஸ்.டி சாலையில், டி.பி. மருத்துவமனை அருகே வந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் தப்பிச் சென்றது.
காரின் மோதி தாக்குதலில், மாணவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டுநர் பால்ராஜ் பலத்த காயமடைந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி வழங்கப்பட்டு, தொடர்ந்து இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி தப்பிச் சென்ற காரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
