தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அக்கட்சியின் சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான “மாபெரும் கோலப்போட்டி பெருவிழா 2026” பரிசளிப்பு நிகழ்ச்சி, கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் தவெக, இத்தகைய பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே தனது செல்வாக்கை உறுதிப்படுத்தி வருகிறது.
விழாவில், கோலப்போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த வெற்றியாளருக்கு ரூ.5,000 பரிசுத் தொகையை நகரச் செயலாளர் செந்தில்குமார் வழங்கினார். இரண்டாம் பரிசுத் தொகையான ரூ.3,000-ஐ நகர நிர்வாகி கிருஷ்ணவேணியும், மூன்றாம் பரிசுத் தொகையான ரூ.2,000-ஐ செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டரும் வழங்கினர். இவை தவிர, போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட ஏழு நபர்களுக்குத் தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.7,000 சிறப்புப் பரிசுத் தொகையைத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் கருப்பசாமி மற்றும் கழக நிர்வாகிகள் வழங்கினர். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்துத் தரப்பு மக்களையும் ஊக்குவிக்கும் விதமாக, சுமார் 800 பங்கேற்பாளர்களுக்குத் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த விழாவினைத் தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொருளாளர் செல்வின் சுந்தர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் உஷாராணி மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் அன்னலட்சுமி, முத்துமாரி, பரமேஸ்வரி ஆகியோர் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் சத்யா சுரேஷ், பார்த்திபன், செயற்குழு உறுப்பினர்கள் கூடலிங்கம், முனீஸ்வரன், மனோஜ் காந்தி, மகேஷ் குமார், சித்ரா கௌதமி, ஜான்சி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், மகளிர் அணி செல்வி, மாணவரணி செண்பகராஜ், உறுப்பினர் சேர்க்கை அணி செல்வம், ஒன்றிய செயலாளர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கோவில்பட்டி நகரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட இந்த முதல் பிரம்மாண்ட மக்கள் தொடர்பு நிகழ்ச்சி, கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.














