ராமேஸ்வரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஷாலினி (17) மீது கத்தியால் தாக்கி கொலை செய்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (21) மீது ராமேஸ்வரம் நீதிமன்றம் 14 நாள், டிசம்பர் 3 வரை நீதிமன்றக் காவல் உத்தரவு வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
சேராங்கோட்டையைச் சேர்ந்த மீனவர் மாரியப்பனின் மகள் ஷாலினி ராமர் தீர்த்தம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மீனவன் முனியராஜ் கடந்த இரண்டு வருடங்களாக ஷாலினியை ஒருதலையாக காதலித்து தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். காதலை நிராகரித்ததால், தனது மார்பில் ஷாலினியின் பெயரை பச்சைக் குத்தியும் காட்டி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க, அண்மையில் ஷாலினி முனியராஜை முழுமையாகத் தவிர்த்துவந்தார்.
நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ஷாலினியை பின்தொடர்ந்து சென்ற முனியராஜ் “கடைசியாக பேச வேண்டும்” என்று தடுத்து நிறுத்தினார். இதற்கு ஷாலினி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முனியராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை கழுத்தில் குத்தி தப்பியோடியார்.
ரத்தவெள்ளத்தில் சரிந்த மாணவியை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.கொலை செய்துவிட்டு தப்பிய முனியராஜ் ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதை அறிந்த ஷாலினியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவரை தாக்க முயன்றனர். இதனால் காவல்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அரசு மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடத்தியதால் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில் போக்குவரத்து முடங்கியது.
ஏஎஸ்பி மீரா சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க செய்யப்படும் என உறுதி அளித்தார். பின்னர் மக்கள் கலைந்தனர். துறைமுக போலீசார் முனியராஜை கொலை குற்றச்சாட்டில் கைது செய்தனர். இன்று ராமேஸ்வரம் நீதிமன்றம் முனியராஜை டிசம்பர் 3 வரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதன்படி அவர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
















