“அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை ; இது கட்சி விதிக்கு முரணானது” – வழக்கறிஞர் பாலு

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட “அன்புமணியை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குகிறேன்” என்ற அறிவிப்பு செல்லாது என அன்புமணி தரப்பின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பாமக நிர்வாக விதிகளின்படி, கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை பொதுக்குழுவே தேர்வு செய்யும். அவர்களுக்கே நிர்வாக அதிகாரம் உண்டு. நிறுவனருக்கு பதவி நீக்கம் செய்வதோ, கூட்டங்களை நடத்துவதோ போன்ற அதிகாரங்கள் வழங்கப்படவில்லை” என்றார்.

மேலும், “கடந்த ஆகஸ்ட் மாத பொதுக்குழுவில், தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்காலம் 2026 ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. அதன்படி, அன்புமணி தலைவர், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளர், திலகபாமா பொருளாளர் பதவியில் தொடர்ந்து உள்ளனர். எனவே ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு எந்த விதத்திலும் கட்சியை கட்டுப்படுத்தாது” என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு முன், ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து, “அன்புமணி 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவில்லை. இரண்டு முறை கால அவகாசம் கொடுத்தும் விளக்கம் தரவில்லை. எனவே அவர் செயல் தலைவர் பதவியிலிருந்து மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார். இன்று முதல் என் பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது. தனியாக கட்சி தொடங்கிக் கொள்ளலாம்; ஆனால் அது வெற்றியடையாது” எனத் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த அன்புமணி தரப்பு, “இத்தகைய அறிவிப்பு கட்சி விதிகளுக்கு புறம்பானது; செல்லுபடியாகாது” எனத் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

Exit mobile version