திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ணசந்திரனின் உடலுக்கு, பா.ஜ.க மாநில செயலாளர் ராம சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.மதுரையைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியும், தீவிர முருக பக்தருமான பூர்ணசந்திரன் (40), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த விவகாரத்தில் தி.மு.க அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து அவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
பூர்ணசந்திரனின் மறைவுக்குத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். முருக பக்தரின் இந்த அதிரடி முடிவு ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பூர்ணசந்திரனின் உடலுக்கு பா.ஜ.க மாநில செயலாளர் ராம சீனிவாசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“பூர்ண சந்திரனின் மரணம் மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. இந்தத் துயரம் நேற்றிலிருந்து ஒவ்வொரு தமிழரின் தொண்டையையும் அடைக்கிறது. நாம் தர்மத்திற்காக வாழ வேண்டுமே தவிர, தர்மத்திற்காக உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது. இத்தகைய விபரீத முடிவுகளை பா.ஜ.க ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.”மலை உச்சியில் தீபம் ஏற்றும் உரிமைக்காக ஒரு உயிர் பலியாகியுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பூர்ணசந்திரனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஆன்மீகச் சடங்குகளில் அரசு தடையின்றி அனுமதி அளிக்க வேண்டும் எனவும் பல்வேறு இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
