கோவை ராம் நகர் சத்தியமூர்த்தி சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தின் 75-வது ஆண்டு ‘பூஜா மஹோத்ஸவ’ விழா, பவள விழாவாகத் தற்பொழுது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த ஆன்மீகப் பெருவிழாவில், நாள்தோறும் பல்வேறு வேத விற்பன்னர்கள் பங்கேற்கும் ஹோமங்களும், இசை மேதைகளின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை 6:00 மணிக்கு ஊர் நன்மை வேண்டி ‘கிராம பிரதக்ஷணம்’ மற்றும் ‘மஹா சங்கல்பம்’ ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மங்களகரமான ‘மஹன்யாச ருத்ர ஜெபமும்’, காலை 10:00 மணிக்குச் சக்திவாய்ந்த ‘ஸ்ரீ ருத்ர ஹோமமும்’ பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டன. மதியம் 12:30 மணிக்கு ‘மஹா பூர்ணாஹூதி’ மற்றும் தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கேரளாவின் உலகப் புகழ்பெற்ற ‘நந்த கோவிந்தம்’ பஜனை குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஐயப்பனின் பெருமைகளை விளக்கும் பாடல்களையும், மனதை உருக்கும் பஜனைகளையும் அவர்கள் இசைத்தபோது, கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்தில் மெய்மறந்து ரசித்தனர். விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை 6:30 மணி முதல் ஸ்ரீ நவசண்டி யக்ஞ மஹா சங்கல்பமும், 7:30 மணிக்கு ஸப்தஸதி பாராயணமும் நடைபெறுகின்றன. மேலும், ஸ்ரீ ஸூக்த ஹோமம் மற்றும் மகா பூர்ணாஹூதியைத் தொடர்ந்து, மதியம் 1:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறவுள்ளது. இன்று மாலை 6:15 மணிக்குக் காந்தார புகழ் சாய் விக்னேஷ் மற்றும் வினயா கார்த்திக் ராஜன் ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதால், பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 75 ஆண்டுகால ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கொண்ட இந்த பூஜா சங்கத்தின் விழா ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
