தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைகிறார்கள்.
1970களில் தொடங்கி அபூர்வ ராகங்கள், தப்பு தாளங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த இருவரும், 1979ஆம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் பிறகு தமிழில் சேர்ந்து நடிக்கவில்லை. தில்லுமுல்லுவில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடித்தது, ஹிந்தியில் அமிதாப் பச்சனுடன் நடித்த Geraftaar படத்துக்குப் பிறகு இவர்களின் கூட்டணி நிறுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு பிறகு இருவரும் மீண்டும் சேரும் படம் குறித்து கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியானது. இப்போது அதை உறுதி செய்துள்ளார் கமல்ஹாசன்.
நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், “ரஜினி–கமல் இணையும் படம் உண்மையா?” என கேட்கப்பட்ட போது கமல், “அது தரமான சம்பவமா என்பதை ரசிகர்களே முடிவு செய்ய வேண்டும். படம் செய்துவிட்டு காட்டுகிறோம்; பிடித்தால் மகிழ்ச்சி, இல்லையெனில் தொடர்ந்து முயற்சி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இணைந்து ரொம்ப காலமாகிவிட்டது. எங்களுக்கு போட்டியே கிடையாது, அது ரசிகர்கள் மற்றும் ஊடகம் உருவாக்கியது. நாங்கள் சேர்ந்து நடிப்பது வியாபார ரீதியாக ஆச்சரியம் தான், ஆனால் எங்களுக்கு இது எப்போதோ நடக்க வேண்டிய விஷயம். இப்போதாவது நடக்கிறது என்பதில் மகிழ்ச்சி” எனவும் கமல் கூறினார்.
இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் என்றும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி – கமல் இணைவு உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், இருவரது ரசிகர்களிடையே பேராதரவு மற்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.