இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு… தேர்தல் ஆணையத்துக்கு நன்றி – ராகுல் காந்தி கிண்டல்

புதுடில்லி : தேர்தல் ஆணையத்தை குறிவைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட புதிய வீடியோ அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா, ஹரியானா மக்களவைத் தேர்தல்கள் மற்றும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக ராகுல் காந்தி சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார். வாக்காளர் பட்டியல் இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வடிவில் வழங்கப்படவில்லை என்பதையும், பாஜகவுக்காக தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபட்டதாகவும் அவர் சாடினார்.

இக்குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து, உறுதிப்படுத்தும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் விளைவுகளை ராகுல் எதிர்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தது.

இந்நிலையில், இறந்தவர்கள் எனக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிலருடன் சந்தித்து உரையாடும் வீடியோவை ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“உயிரிழந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு மட்டுமே கிடைத்தது. இந்த தனித்துவமான வாய்ப்பை வழங்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.”
என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியலில், இருப்பவர்களை இறந்தவர்களாகவும், இறந்தவர்களை இருப்பவர்களாகவும் காட்டும் பிழைகள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ராகுலின் இந்த புதிய வீடியோ தொடர்பில் தேர்தல் ஆணையம் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதையும், உண்மை நிலைமை என்ன என்பதையும் நாடு கவனித்து வருகிறது.

Exit mobile version