பீஹாரில் தேர்தல் முறைகேடு முயற்சி : தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம்

“மஹாராஷ்டிராவைப் போலவே பீஹாரிலும் தேர்தல் முறைகேடு நடக்கிறது” எனக் குற்றம் சுமத்திய காங்கிரஸ் எம்.பி. மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யவில்லை என்றும், பா.ஜ.க.வின் ஐ.டி.விங் போல செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பேசிய ராகுல், பிஜூ ஜனதா தளம் ஆட்சியில் செய்த செயல்களைப் போன்று பா.ஜ.க. அரசு செயல்படுவதாக கூறினார். “ஏழைகள் கையில் இருக்கும் சொத்துகளை பா.ஜ.க. அரசு பறிக்கிறது. ஒடிசா முழுவதும் பா.ஜ.க. ஆட்சி முறைகேடு மற்றும் கொள்ளையுடன் நடைபெறுகிறது,” என அவர் சாடினார்.

விவசாயிகள், பெண்கள், பழங்குடியினர் ஆகியோரின் பிரச்சனைகளை நேரடியாக கேட்டுள்ளதாகவும், அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “பா.ஜ.க. அரசு பணக்கார முதலாளிகளுக்கு பக்கம் நிற்கிறது. ஆனால் காங்கிரஸ் எப்போதும் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினருக்காக குரல் கொடுக்கும்,” என்றார்.

மேலும், மஹாராஷ்டிராவில் கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கிடையில், சுமார் 1 கோடி புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் ராகுல் கூறினார்.

“வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம். ஆனால் அதைப் பெற முடியவில்லை. இது பொதுவாகவே தேர்தல் நடைமுறையை கேள்விக்குள்ளாக்குகிறது,” என அவர் விமர்சித்தார்.

Exit mobile version