புதுடில்லி : பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளது. ராகுலிடம் மன்னிப்பு கேட்க உத்தரவிடவும், பிரசாரத்துக்கு தற்காலிக தடை விதிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக நவம்பர் 6ஆம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 59 நாட்களாக பீஹார் மாநிலத்தில் பிரசாரத்துக்குச் செல்லாத காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நேற்று தர்பங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசாரம் தொடங்கினார். அப்போது அவர், “ஓட்டுக்காக பிரதமர் மோடி எந்தவிதமான நாடகத்தையும் அரங்கேற்றுவார். ‘நடனம் ஆடினால் தான் ஓட்டு போடுவேன்’ என்றால் கூட, உடனே பரதநாட்டியமே ஆடுவார்,” என விமர்சித்தார்.
இது தொடர்பாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “ராகுலின் பேச்சு ஒரு தெரு ரவுடி பேச்சை நினைவூட்டுகிறது. இப்படியான முறையில் பிரதமரை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இது ஜனநாயகத்தையும், மக்களின் வாக்குரிமையையும் அவமதிக்கும் செயல்,” என பாஜக தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பீஹார் மாநில தேர்தல் அதிகாரியிடம் பாஜக அளித்த மனுவில், “தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பொது பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி, ராகுல் காந்தி அவதூறு மற்றும் இழிவான வார்த்தைகளில் பேசியுள்ளார். இதற்காக தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், ஜனநாயக மரியாதையை பாதுகாக்க குறிப்பிட்ட காலத்திற்கு அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

















