இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க மத்திய அரசு அனுமதி மறுக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பது மிக நீண்ட காலமாக பின்பற்றப்பட்ட நடைமுறையாகும். மன்மோகன் சிங் காலமும், வாஜ்பாய் காலமும் இதையே பின்பற்றியுள்ளன. ஆனால் தற்போது பாஜக அரசு எனக்கு அனுமதி வழங்க மறுக்கிறது,” என கூறினார்.
மேலும், சில வெளிநாட்டு பிரதிநிதிகள் தமக்கு, “மத்திய அரசு, இந்தியாவிற்கு வரும் போது எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க வேண்டாம்” என்று சொல்லி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது அரசாங்கத்தின் மட்டும் பொறுப்பு அல்ல. எதிர்க்கட்சிக்கும் அதில் இடம் உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறைக்கு தன்னம்பிக்கை குறைவாக இருப்பதே இப்படியான முடிவுகளுக்கு காரணம்,” என ராகுல் காந்தி விமர்சித்தார்.
