தேர்தல் ஆணையம் தனது கடமையை முறையாக நிறைவேற்றவில்லை எனவும், கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் மோசடியை அனுமதித்ததற்கான 100% ஆதாரம் காங்கிரஸிடம் உள்ளதாகவும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாட்டை விட்டுள்ளார்.
பீஹார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 52 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், 18 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும், 26 லட்சம் பேர் வேறு தொகுதிக்கு மாறியவர்கள் என்றும், 7 லட்சம் பேர் இரு இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஆதரிக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
“தேர்தல் ஆணையம் அதன் பணியை சரியாக செய்யவில்லை. இன்று அவர்கள் வெளியிட்ட அறிக்கை முழுமையான முட்டாள்தனம். இந்திய தேர்தல் ஆணையம் எனும் நம்பிக்கையை இழந்துவிட்டனர்,” என்றார் அவர்.
மேலும், “கர்நாடகாவின் ஒரு தொகுதியில் மட்டும் பார்வையிட்டபோதே, பெரிய அளவிலான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் நாடகத்தின் ஒரு சின்ன பகுதி மட்டுமே. ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்களின் வயது 50, 60 என்று உள்ளது. இது வாக்காளர் பட்டியலில் திட்டமிட்ட முறையில் செய்யப்படும் மோசடிக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக உதவுகிறது,” எனக் குற்றம் சுமத்தினார்.