டில்லியில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் பங்கேற்காத லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதை பாஜக, சுதந்திர தியாகிகளை அவமதிக்கும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெஷாத் பூனவாலா தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில்,
“நாடு முழுவதும் கொண்டாடப்படும் விழாவை, பாகிஸ்தான் விரும்பி ராகுல் புறக்கணித்தது வருத்தகரமானது. இது மோசமான நடத்தை. இதுதான் இந்திய அரசியலமைப்புக்கும், ராணுவத்திற்கும் கொடுக்கும் மரியாதையா?” என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சி சார்பில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில், கொட்டும் மழையிலும் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.