கடத்தல் மற்றும் வேட்டையால் அழிந்து வரும் காண்டாமிருகங்களை பாதுகாக்க, அவற்றின் கொம்புகளில் கதிரியக்க ஊசியை செலுத்தும் திட்டத்தை தென்னாப்பிரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 5 லட்சம் காண்டாமிருகங்கள் இருந்தன. ஆனால் தற்போது, அதன் எண்ணிக்கை 27,000 ஆக குறைந்துவிட்டதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) தெரிவித்துள்ளது. காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கு உள்ள அதிக சந்தை தேவையே, கடத்தலும் வேட்டையாடலும் அதிகரிக்க காரணமாக உள்ளது.
இந்த சூழலில், தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் ‘ரைசோடோப்’ எனப்படும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில், அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையினரின் ஆலோசனையுடன், காண்டாமிருகத்தின் கொம்புகளில் கதிரியக்க ஐசோடோப்புகளை ஊசி மூலம் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம், காண்டாமிருகம் கடத்தப்படும்போது விமான நிலையங்கள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் உள்ள ஸ்கேனர்கள் அதன் கொம்புகளில் உள்ள கதிர்வீச்சை கண்டறிந்து எச்சரிக்கையை ஏற்படுத்தும்.
முதற்கட்டமாக, உயிரியல் பூங்காவில் இருந்த 20 காண்டாமிருகங்களில் இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் மேலும் 5 காண்டாமிருகங்களுக்கு கதிரியக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் தலைமை அறிவியல் அதிகாரி ஜேம்ஸ் லார்கின் கூறும்போது, “இந்தக் கதிர்வீச்சை ஸ்கேனர்களில் எளிதாகக் கண்டறிய முடியும். இது கடத்தலாளர்களுக்கு எதிரான ஒரு பயமூட்டும் ஆயுதமாக மாறும்,” என தெரிவித்துள்ளார்.