பல்வேறு சிறப்புகளைக் கொண்ட புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று, இந்த மாதத்தில் அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் என தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது சிறப்பு.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிப்பட்டால் சனி பகவானின் பிடியிருந்து விடுபட்டு, காரியத்தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் படையல் இட்டு பெருமாளை வழிபடுகின்றனர்.
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருமலையில் பெருமாளின் அவதாரம் நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
கர்ம பலன்களை அழிக்கும் சனிபகவான் கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமையில் பிறந்தார். சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள்.

சனிபகவான் கலியுகத்தில் முதல் முதலாக வரும் போது, நாரத முனிவர் சனிபகவானிடம், பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம். ஆனால், திருமலை பக்கம் சென்று விடாதீர்கள் என்று அவரை தூண்டி விடுவது போல கூறினார். அதைக் கேட்ட சனி பகவான், என்னை யார் என்ன செய்ய முடியும் என்று திருமலையில் மேல் தன் காலை வைத்தார்.
சனிபகவான் கால் வைத்ததும் அடுத்த நொடி பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார். திருமலையில் யார் இருக்கிறார் என தெரிந்தும் மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் சனிபகவானே துன்பப்பட்டு நடு நடுங்கி தன்னையும் படைத்து வழிநடத்தும் மகாவீஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதை கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டார்
அதற்கு ஏழுமலையான், என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பப்படுத்த மாட்டேன் என்று கூறினார். சனிக்கிழமை விரதம் பிறகு சனிபகவான் பெருமாளிடம், மகாபிரபு! எனக்கு ஒரு வரம் தரவேண்டும் என்று கேட்டார்.

நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை அதனால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும் என்ற வரத்தை கேட்டார். பெருமாளும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்று கொண்டார். அதனால் தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது.
புனர்ப்பு தோஷம் நீங்கும் ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்ட சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், புனர்ப்பு தோஷத்தினால் திருமண தடை ஏற்பட்டுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளுக்கு படையல் போட்டு வழிபடலாம். திருமணம் நடைபெறுவதில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்குரியதாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் புதன் பகவானின் அதிதேவதையாக மகா விஷ்ணு உள்ளார். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் பகவான் மகா விஷ்ணுவின் அருளைப் பெற்றுத் தரும். சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. அனைத்து சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வணங்குவது நல்லது.

அப்படி விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள் இந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்து, முடிந்த அளவிற்கு அன்னதானம் வழங்கினால் பெருமாளின் அருளாசிகளைப் பெறலாம். சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது சிறப்பென்றாலும், அதிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது கூடுதல் சிறப்பு.
பெருமாளுக்கு நாடெங்கும் கோயில்கள் இருந்தாலும் திருப்பதியில் அமைந்துள்ள வெங்கடாசலபதி திருக்கோயில் இந்தியளவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. திருமலையில் பீமன் என்கிற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் தீவிர பக்தன். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டான் பீமன்.
ஆனால் பரம ஏழையான பீமன் விரதத்தை மேற்கொள்ள கோயிலுக்கு செல்லக்கூடிய வசதியில்லாமல் இருந்தான். அப்படியே கோயிலுக்கு சென்றாலும் பூஜை செய்யத் தெரியாது. பீமன் தனது தொழிலான மண்பாண்டங்களை செய்து வந்தான்.

கோயிலுக்குப் போகும் சூழல் இல்லாததால், பெருமாளையே இங்கு வரவழைத்துவிட்டால் என்ன என்று தோன்றியது பீமனுக்கு. பீமனிடம் இருந்த களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தான். அதற்கு பூஜை செய்ய பூக்கள் வாங்கக் கூட அவரிடம் பொருள் வசதியில்லை. அதன் காரணமாக தினமும் தன் வேலை செய்து முடித்தவுடன் மீதமாகும் களிமண்ணில் பூக்கள் செய்தான்.
அப்படி செய்த பூக்களை மாலையாக கோர்த்து மண் பூ மாலையாக பெருமாளுக்கு அணிவித்து பூஜித்தான். இதற்கிடையே அந்த நாட்டை ஆண்டு வந்த அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திருமலையில் வீற்றிருக்கும் வெங்டசலாபதிக்கு தங்க பூமாலையை அணிவிப்பது வழக்கம்.
அவர் ஒரு வாரத்தில் மாலையை அணிவித்து விட்டு மறுவாரம் வந்து பார்க்கும் போது தங்கப் பூமாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட பூமாலை பெருமாளின் கழுத்தில் இருந்தது. இதைக் கண்ட தொண்டைமான் அதிர்ச்சியடைந்து அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களை சந்தேகம் கொண்டு குழப்பமடைந்தார்.

பின்பு தொண்டைமானின் கனவில் தோன்றிய பெருமாள், தனது தீவிர பக்தனான குயவன் பீமனின் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், வறுமையில் வாடுகின்ற அவனுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அரசனுக்கு ஆணையிட்டு மறைந்தார். திருமாலின் ஆணைப்படி அரசன் தொண்டைமான் குயவன் பீமனை கௌரவித்து அனைத்து உதவிகளையும் செய்தார்.
பெருமாள் மீது குயவன் பீமன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் விதமாக இப்போதும் திருப்பதியில் மண் சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் பெருமாளுக்கு சிலர் பலவகை உணவுகளை படைத்து வழிபாடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளி சாதல், மிளகு சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், எள்ளு சாதம், கொண்டைக்கடலை சுண்டல், உளுந்த வடை, மிளகு வடை செய்வார்கள்.
சனிக்கிழமை தாளிகை என்று சொல்வார்கள். இந்த படையலுக்கு செய்யும் உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்க்க மாட்டார்கள். பெருமாளுக்கு தூய பச்சரிசி மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும். புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும்.
திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும் பெண்கள் தமது இடது கையிலும் அணிந்து கொள்வர்.
சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைத்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் பாதியுடம்பை பெற்று, அர்த்தநாரியாகவும் அர்த்த நாரீசுவரியாகவும் ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும். இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்

புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும். புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று லட்சுமி தேவியின் மூத்த சகோதரியாகக் கருதப்படும் ஜேஷ்டா தேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது.
இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருள்கிறாள் அன்னை. புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும்.
இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும். புரட்டாசி அமாவாசைக்கு பதினைந்து நாட்கள் முன்பு வருவது மஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.















