தமிழகம் வந்தார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று சென்னை வந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, மதுரையில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி, நாளை (ஆகஸ்ட் 26) சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அதனை ஏற்று அவர் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான்,
“தமிழகத்துக்கும் பஞ்சாப்பிற்கும் இடையே நீண்டகால நல்லுறவு நிலவி வருகிறது. கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று இங்கு வந்து, காலை உணவு திட்ட விரிவாக்க விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்கு நன்றி,” எனக் கூறினார்.

Exit mobile version