“நேதாஜி வழியில் மக்கள் சேவை”: வத்தலகுண்டு இலவசப் பொது மற்றும் கண் மருத்துவ முகாம்!

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீரத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகிலுள்ள வெங்கடாஸ்திரிகோட்டையில் தேசபக்தியுடன் கூடிய மக்கள் சேவை அரங்கேறியது. நேதாஜி மகளிர் பவுண்டேஷன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நேதாஜி மகளிர் பவுண்டேஷன், வத்தலகுண்டு ரோட்டரி சங்கம், ஸ்ரீ பாமா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் நிலக்கோட்டை தமிழன் கண் மருத்துவமனை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, ஏழை எளிய மக்களுக்கான மாபெரும் இலவசப் பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாமை நடத்தின.

இந்த முகாமிற்கு வத்தலகுண்டு பேரூராட்சித் தலைவர் பா. சிதம்பரம் தலைமை தாங்கி, சமூகப் பொறுப்புடன் செயல்படும் அமைப்புகளின் சேவையைப் பாராட்டிப் பேசினார். ரோட்டரி மாவட்டச் செயலாளர் முகமது நஜிமுதீன் மற்றும் தமிழர் தேசிய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் செல்வம் ஆகியோர் முகாமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர். திண்டுக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளர் கே. மாதவன், துணை ஆளுநர் பொன் ரகுநாதன், ஆடிட்டர் எஸ். விஜயன் மற்றும் வத்தலகுண்டு ரோட்டரி சங்கத் தலைவர் மகேந்திர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

முகாமில் வத்தலகுண்டு ஸ்ரீ பாமா மருத்துவமனையின் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் பொதுவான உடல் உபாதைகளுக்கான பரிசோதனைகளைச் செய்து ஆலோசனைகளை வழங்கினர். அதேபோல், நிலக்கோட்டை தமிழன் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் அதிநவீன கருவிகளைக் கொண்டு கண்புரை, பார்வைக் குறைபாடு உள்ளிட்ட கண் சார்ந்த பரிசோதனைகளைச் செய்து, தகுதியுள்ளவர்களுக்கு மேல்பிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

இந்த முகாமில் இந்தியன் பெர்டிலைசர் சக்திவேல், ரோட்டேரியன் மருத்துவர் யூசுப் மௌலானா, பி.எஸ்.ஆர் மருத்துவமனை எம்.பி. பிரபாகரன், ஆசிரியர் அந்தோணி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், நேதாஜி மகளிர் பவுண்டேஷனின் அனைத்து உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். வெங்கடாஸ்திரிகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்றுத் தங்களது உடல்நலனைப் பரிசோதித்து அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டனர்.

நேதாஜி மகளிர் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநரும், ரோட்டரி சங்கத்தின் வருங்காலத் தலைவருமான ஆர். பாண்டித்துரை அவர்கள் இந்த முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தார். நேதாஜியின் பிறந்தநாளை வெறும் கொண்டாட்டமாக மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆக்கப்பூர்வமான நிகழ்வாக மாற்றிய இக்குழுவினரின் முயற்சியைப் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். விழாவின் நிறைவாக, முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version