நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட அதிகரட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று தொடர்ந்து நடமாடி வருவதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குந்தா வனச்சரகம், அதிகரட்டி பிரிவுக்குட்பட்ட பரஞ்சோதி காப்புக் காடு தரிகெடா பகுதியில் இந்த ஒற்றைக் காட்டு யானை முகாமிட்டுள்ளது.
இந்த யானையானது பரஞ்சோதி, கிளிஞ்சாடா, கக்காச்சி, கெந்தளா, மகாராஜா, சன்னிசைடு, கோடேரி, குன்னக்கொம்பை, அல்லாடா, கிரேக்மோர் எஸ்டேட், சட்டன் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்தப் பகுதிகளில் சுற்றி வரும் யானை, விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்ச் செடிகளை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பகல் நேரங்களில் கூட யானை தேயிலைத் தோட்டங்களில் உலா வருகிறது. இதனால் தோட்டப் பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. யானை பொது மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகிலும் நடமாடுவதால், இப்பகுதி மக்களும் பீதியடைந்துள்ளனர். ஒற்றை யானையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், யானை நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

















