”27 வருட உழைப்பு சுக்குநூறாகிப் போனது.. வேறொருவராக இருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள்” – ’புலி’ பட தயாரிப்பாளர் வேதனை

நடிகர் விஜய் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான புலி திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது குறித்து, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜயின் முன்னாள் PRO-வான PT செல்வகுமார் வேதனைத் தெரிவித்தார்.

சிம்புதேவன் இயக்கத்தில், விஜயுடன் நடிகைகள் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகர்கள் சுதீப், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த புலி திரைப்படம், 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம், ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி, 100 கோடி வசூலுக்கு மேல் செல்லாமல் தோல்வியடைந்தது.

சமீபத்தில் PT செல்வகுமாருக்கு 125 படங்களை வெளியிட்டதற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவில் பேசும்போது, புலி தயாரிப்பின் பின்னணியை அவர் உருக்கமாக பகிர்ந்துகொண்டார்.

PT செல்வகுமார் கூறியதாவது :
“ஒருநாள் விஜய், அடுத்தப்படத்தை நீங்கள்தான் தயாரிக்க வேண்டும் என்று சொன்னார். ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்த நான், அவரின் விருப்பத்திற்கிணங்க தயாரிப்பாளராக களம் இறங்கினேன். வில்லன் கதாபாத்திரத்துக்கு முதலில் ஷோபனாவும், தளபதியாக நாசரும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால் நான் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் எனக் கூறினேன். மூன்று நாட்கள் மும்பையில் தங்கி, அவரின் கால்ஷீட்டை பெற்று வந்தேன். அதேபோல் சுதீப்பையும் நேரில் சந்தித்து சம்மதிக்க வைத்து நடிக்கச் செய்தேன்.

படம் உருவாகிக் கொண்டிருந்தபோது, எனது மீது சிலர் பொறாமை கொண்டதால், விஜய் வீட்டிலும், அவரது தந்தை வீட்டிலும், எனது இல்லத்திலும் ஐடி சோதனை நடத்தப்பட்டது. படம் வெளியாகாதோ என்ற சூழல் ஏற்பட்டது. என்னிடம் இருந்த வீட்டு பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் வைத்து, அந்தப் படத்தை வெளிவரச் செய்தேன்.

ஆனால், துரதிருஷ்டவசமாக படம் தோல்வியடைந்தது. என் 27 வருட உழைப்பும், ஒரே படத்தால் சிதைந்துவிட்டது. வேறு ஒருவராக இருந்தால் அந்த வேதனையை தாங்க முடியாமல் தற்கொலை செய்திருப்பார்கள். நான் பணக்கார குடும்பத்தில் பிறந்தவன் அல்ல, ஒரு பத்திரிக்கையாளன், PRO-வின் மீதான நம்பிக்கையால் தயாரிப்பில் இறங்கினேன். அவரை ஏமாற்றாமல் போராடியபோதும், என் அதிர்ஷ்டம் படம் வெற்றி பெறவில்லை,” என உருக்கமாக பேசியுள்ளார்.

Exit mobile version