கல்வி மற்றும் சமூக சேவையில் ஒரு நூற்றாண்டைக் கடந்து சாதனை படைத்து வரும் கோவையின் புகழ்பெற்ற பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை (PSG & Sons’ Charities), தனது 100 ஆண்டு காலப் பணிகளைக் கொண்டாடும் வகையில், “காதம்பரி-2026” என்ற நான்கு நாள் பிரம்மாண்ட இசை மற்றும் கலை விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி ஐஎம்எஸ் அன்ட் ஆர் (PSG IMS&R) கலையரங்கில் இந்த கலாச்சாரத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்தியாவின் பாரம்பரியமிக்க கர்நாடக இசை, மெல்லிசை மற்றும் நடனக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கிலும், பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களில் பயிலும் இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது.
விழாவின் முதல் நாளான ஜனவரி 2-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, பிஎஸ்ஜி கல்வி நிறுவன மாணவர்களின் “தர்ம ஸ்வரங்கள்” எனும் மெல்லிசை (Light Music) நிகழ்ச்சியுடன் விழா இனிதே தொடங்குகிறது. அன்று கலைத்துறையில் சிறந்து விளங்கும் தகுதியுள்ள மாணவர்களுக்கு “கலைச் சுடர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. இரண்டாம் நாளான ஜனவரி 3-ம் தேதி, மாணவர்களின் “தசாவதார தர்மம்” என்ற கண்கவர் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அன்று “யுவ கலாரத்னா” விருதுகள் வழங்கப்பட்ட பின், எஸ். ஐஸ்வர்யா மற்றும் எஸ். சந்தியா ஆகியோரின் “மதுர சங்கீதம்” எனும் மனதை வருடும் கர்நாடக இசைக் கச்சேரி இடம்பெறும்.
மூன்றாம் நாளான ஜனவரி 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கர்நாடக இசைத் துறையினரின் “தர்ம மார்கம்” இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இந்த விழாவின் சிகரமாக, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் பெற்ற உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை சுதா ரகுநாதன் அவர்களின் இசை கச்சேரி நடைபெற உள்ளது. இறுதி நாளான ஜனவரி 5-ம் தேதி திங்கட்கிழமை, பள்ளி மாணவர்களின் “உள்ளம் உருகுதையா” பக்தி இசை நிகழ்ச்சியும், பின்னர் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் சத்ய பிரகாஷின் “தர்மம் தலைக்காக்கும்” எனும் மெல்லிசை மற்றும் கிளாசிக்கல் இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை தனது 100 ஆண்டுகாலப் பயணத்தில் கலை, பண்பாடு மற்றும் கல்விக்கு ஆற்றிய சேவையை மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு பாலமாக “காதம்பரி-2026” அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். இருப்பினும், இருக்கைகளை உறுதி செய்ய முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசை ஆர்வலர்கள் அதிகாரப்பூர்வ க்யூஆர் (QR) கோடை ஸ்கேன் செய்தோ அல்லது 98947 59934, 87540 22880 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டோ தங்களின் இலவச அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
