சின்னமனூர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு அரசு ஒதுக்கீடு செய்த நிலங்களுக்கு முறையாகப் பட்டா வழங்கக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகச் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
சின்னமனூர் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘குடியேறும் போராட்டம்’ அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் டி.எஸ்.பி. முத்துக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரும்புத் தடுப்புகளைக் கொண்டு நுழைவாயில் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பாலபாரதி தலைமையில், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேசன், தர்மர், கண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்தபோது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தடையை மீறி உள்ளே செல்ல முயன்றவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா மற்றும் வட்டாட்சியர் சதீஸ்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆதிதிராவிடர் நிலங்களுக்குப் பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவுகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் ஆட்சியரைச் சந்தித்துப் பேசித் தங்களது கோரிக்கைகளை நேரில் வலியுறுத்தினர். கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகத் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பரபரப்பான சூழல் நிலவியது.
